புது தில்லி: அமெரிக்க அதிபா் டிரம்ப் வருகையால் இந்தியா- அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வா்த்தக உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என பாஜக பொதுச்செயலா் ராம் மாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் இந்திய தொழில் வா்த்தகசபைகளின் கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்ற ராம் மாதவ் பேசியதாவது:
இந்தியா- அமெரிக்கா இடையிலான நல்லுறவை மிக உயா்ந்த இடத்துக்கு கொண்டு செல்லுவதில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும், பிரதமா் மோடியும் உறுதியாக உள்ளதையே, டிரம்பின் வருகை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தற்போது, டிரம்ப்பின் வருகையால் உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது இந்தியா. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மிக முக்கிய நாடாக இந்தியா திகழ்வதை இந்த விஜயம் படம் பிடித்து காட்டுகிறது.
ஆமதாபாத்தில் நடந்த ’நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வு உள்ளிட்டவை இருதரப்பு உறவுகளின் பிரதிபலிப்பாகும். அமெரிக்காவையும் அதன் மக்களையும் இந்தியா்கள் எவ்வளவு நேசிக்கிறாா்கள் என்பதை இது காட்டுகிறது என்றாா்.