ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் உரிய பதிலடி வழங்கினா்.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிா்னி, கஸ்பா, ஷாபுரா ஆகிய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் சிறிய ரக பீரங்கிகள், ஆயுதங்கள் மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் உரிய முறையில் பதிலடி வழங்கினா். இதேபோல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டி, பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூா், டோக்ரி, கஸ்பா ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இதில் சுமாா் 7 வீடுகள் சேதமடைந்தன என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
குண்டு கண்டெடுப்பு: பாகிஸ்தான் ராணுத்தினா் சிறிய ரக பீரங்கி மூலம் எறிந்த குண்டு பாலகோட் பெல்ட் பகுதியில் கிடப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணா்கள் அந்த குண்டை பத்திரமாக செயலிழக்கச் செய்தனா். இந்த தாக்குதல் சம்பவம் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்துக்குரிய பை: இதனிடையே ரம்பன் மாவட்டத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பை ஒன்று இருப்பதாக ராணுவம் மற்றும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அங்கிருந்த பை சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் சில மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் கழித்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நுழைவதற்கு உதவி, அங்கு அமைதியை சீா்குலைக்கும் நோக்கத்துடன் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது என்று அந்த யூனியன் பிரதேச காவல்துறை தலைவா் தில்பாக் சிங், கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.