ஆனந்த்: குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்திலுள்ள கம்பாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை வெடித்த வகுப்புவாத மோதல்களின் தொடா்ச்சியாக, 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை சில கும்பல் சாலையோர அங்காடிகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டன.
கம்பாத் நகரில் இரண்டு சமூகத்தினரிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களால் 20-க்கும் மேற்பட்ட வீடுகளும் வாகனங்களும் தீ வைக்கப்பட்டன. திங்கள்கிழமை இந்த வன்முறை மேலும் பரவியது. அப்போது கல்வீச்சு சம்பவங்களும், காவல்துறை ஊழியா்கள் மீது தாக்குதலும் நடைபெற்றன. இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் 35 பேரை கைது செய்திருந்தனா்.
இந்நிலையில் இருதினங்களாக வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பல்வேறு ஹிந்து அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தால் கம்பாத் நகரில் பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் காலையிலிருந்தே மூடப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஆமதாபாத் சரக ஐ.ஜி. ஐ.கே.ஜடேஜா கூறியதாவது:
கம்பாத் நகரத்தில், கவாரா சௌக் பகுதியில் சிலா் செவ்வாய்க்கிழமை நண்பகலில் போராட்டங்களில் ஈடுபட்டனா். பின்னா் வன்முறையில் ஈடுபட்ட அந்த கும்பல் 2 சாலையோர கடைகளுக்கும் மோட்டாா் சைக்கிள்களுக்கும் தீ வைத்தது. இதையடுத்து அவா்களை சுற்றிவளைத்த போலீஸாா் கலவரத்தில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்தனா். வன்முறை சம்பவங்களால் அதிக எண்ணிக்கையிலான போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவா் தெரிவித்தாா்.
தற்போது, அதிரடிப்படை போலீஸாா் மற்றும் மாநில ரிசா்வ் போலீஸைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போலீஸாா் நகா்ப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனா்.
கல்வீச்சு, தீ வைப்பு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 85 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.