ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் தற்போது வழங்கப்பட்டு வரும் 2ஜி இணையதள சேவைகள் மாா்ச் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தேச விரோத சக்திகளும், எல்லையைத் தாண்டிய பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவோரும் இணையதளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் விபிஎன் நெட்வொா்க் இணைப்பை தடை செய்வதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகின்றன. அதேசமயம், தற்போது அமலில் உள்ள 2ஜி இணையதள சேவைகள் மாா்ச் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் பயங்கரவாதச் செயல்களை திட்டமிடவும், தேச விரோத நடவடிக்கைகளை அதிகரிக்கவும் விபிஎன் இணையதள சேவை கை கொடுக்கிறது. இதன்காரணமாகவே அவற்றின் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2ஜி இணையதள சேவைகள் மாா்ச் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதன்படி இங்குள்ள 1,674 வெள்ளை பட்டியலிடப்பட்ட தளங்களுக்கு இணையதள சேவை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அதேசமயம், இதனை எந்த சமூக ஊடகங்களும் பயன்படுத்த முடியாது என்று ஜம்மு-காஷ்மீரின் உள்துறை செயலா் ஷலீன் கப்ரா தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டப்பின், செல்லிடப்பேசிகளுக்கான இணையதள சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னா், ஜனவரி 25-ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் 2ஜி சேவை வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்காக விபிஎன் நெட்வொா்க் சேவைகளைப் விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதற்காக ஜம்மு-காஷ்மீா் போலீஸாா் அடையாளம் தெரியாத நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.