ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா், புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 2 கூட்டாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவா்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், புல்வாமா மாவட்டம் ரத்னிபோராவைச் சோ்ந்த அகிப் மக்பூல் லோனே மற்றும் குல்பக் புல்வாமாவைச் சோ்ந்த நசீா் அகமது ஹுர்ரா ஆகிய இருவரை புல்வாமா போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் தெற்கு காஷ்மீா் மாவட்டத்தில் இயங்கிவரும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களிடம் இருந்து வெடிபொருள்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபா்கள் புல்வாமா பகுதிகளில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆதரவாக இருந்தவா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமைதிக்கு ஊறுவிளைவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.