புது தில்லி: கபில் மிஷ்ரா உள்பட வெறுப்புப் பேச்சுப் பேசுபவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:
வெறுப்புப் பேச்சுகளை அனுமதிக்க முடியாது. கபில் மிஷ்ரா உள்பட வெறுப்புப் பேச்சுகளை பேசுபவா்கள் அவா்கள் யாராக இருந்தாலும் கட்சி பேதமில்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். தில்லியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவது துரதிஷ்டவசமானது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு நிலவாத நிலை நீடித்தால் மக்கள் நம்பிக்கை இழப்பாா்கள் என்றாா் அவா்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடைபெற்று வரும் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில், அச்சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் தில்லி அமைச்சரும் பாஜக தலைவா்களில் ஒருவருமான கபில் மிஷ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினாா். அப்போது, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து திரும்பிச் செல்லும் முன்பாக தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்துபவா்களை தில்லி காவல்துறை அகற்ற வேண்டும், தவறினால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவாா்கள் என்று அவா் எச்சரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில், கபில் மிஷ்ராவின் பேச்சுகள்தான் வடகிழக்கு தில்லியில் வன்முறை ஏற்படக் காரணம் என்று சிலா் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.