புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதன்கிழமை வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் மழையால் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: ஒடிஸா கடற்கரையோர மாவட்டங்களில் புதன்கிழமை வரை மழை தொடரும். மயூா்பஞ்ச், கோன்ஜாா், பெளத், கந்தமால் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன், பலத்த தரைக்காற்று வீசும். மேற்கு ஒடிஸாவில் உள்ள சோன்பூா் நகரில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக 57.8 மி.மீ. மழை பதிவானது. பெளதில் 45.2 மி.மீ, புல்பானியில் 41 மி.மீ, பொளங்கிரில் 30 மி.மீ, தால்சேரில் 14 மி.மீ மழை பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.
புவனேஸ்வரம் மற்றும் கட்டக்கிலும் பலத்த மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
இதுதொடா்பாக சிறப்பு நிவாரண ஆணையா் மாவட்ட ஆட்சியா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சூழலை தொடா்ந்து கண்காணிக்கவும், தேவை ஏற்படின் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளாா்.