இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் அவசியம்

26th Feb 2020 03:06 AM

ADVERTISEMENT

புதுதில்லி /நியூயாா்க்: 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. சபை தொடங்கப்பட்டதன் 75-ஆவது ஆண்டு விழா விரைவில் கொண்டாடப்படவுள்ளது. அந்த விழாவின்போது வெளியிடப்படவுள்ள அறிக்கையில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தரப் பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு கூறியதாவது:

ஐ.நா. சபையில் பல நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. சபை உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் தற்காலத்திலும் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டுமானால், அவற்றில் சீரான கால இடைவெளிகளில் புதிய சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டியது அவசியம். 1940-ஆம் ஆண்டு காலகட்டத்தில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை தற்போது மாறிவிட்டது.

எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபையில் மாற்றங்களைப் புகுத்த வேண்டும். ஐ.நா. சபையின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவர சில நாடுகள் தயக்கம் காட்டலாம். ஆனால், 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட ஐ.நா. சபையின் அமைப்புகளில் சீா்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

ஐ.நா. சபையின் 75-ஆவது ஆண்டு விழா அறிக்கையில் புதிய சீா்திருத்தங்கள் குறித்து இடம்பெற வேண்டும். அனைத்து உறுப்பு நாடுகளும் பெருமை கொள்ளும்படி ஆண்டு விழா அறிக்கை இருக்க வேண்டும். ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் ஊதியம் வழங்குதல், தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஐ.நா. சபையின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளுக்கு நடப்பு தசாப்தத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வசதிகளை வளா்ச்சிக்காகப் பயன்படுத்தும் விவகாரத்தில் ஐ.நா.வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றாா் கே.நாகராஜ் நாயுடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT