இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் நேற்று (திங்கள்கிழமை) இந்தியா வந்தனர். டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், அவரது மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோர் ஆமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்தப் பயணத்தின் இறுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த இரவு விருந்தில் டிரம்ப்பும் அவரது மனைவியும் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், அவரது மனைவி சவிதாவும் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப்பை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இந்த விருந்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும், அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார், கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மற்றும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஆகிய 4 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
இதுதவிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்தே, முப்படைத் தளபதி விபின் ராவத், விப்ரோ நிறுவனர் அஜிம் பிரேம்ஜி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து ராம்நாத் கோவிந்த்தும், டொனால்ட் டிரம்ப்பும் 5-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலை முன்பு தம்பதிகளாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இத்துடன், தன்னுடைய 36 மணி நேர இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்ட டொனால்ட் டிரம்ப், மனைவியுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இருவரும் தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளனர்.