இந்தியா

குடியுரிமைச் சட்டம் குறித்து அதிபர் டிரம்ப் சொன்ன ஆச்சரிய பதில்

25th Feb 2020 05:53 PM

ADVERTISEMENT


புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

டிரம்ப் உரையாற்றிய பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, இந்தியாவில் மத சுதந்திரம் என்பது மிகச் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். இந்தியாவில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் நான் நேரடியாகப் பேசினேன். ஆனால், யாரிடம் இருந்தும் மதச் சுதந்திரம் குறித்து எதிர்மறையான கருத்துகள் வரவில்லை என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

பிரதமர் மோடியிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துப் பேசினீர்களா என்று கேட்டதற்கு, பிரதமர் மோடியிடம் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நான் எதுவுமே பேசவில்லை. ஆனால் இந்தியாவில் இருக்கும் மத சுதந்திரம் குறித்துப் பேசினேன் என்று டிரம்ப் பதிலளித்தார்.

மேலும், மத சுதந்திரத்துக்காக இந்தியா கடுமையான முறையில் பாடுபட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 


பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த டிரம்ப், இந்தியா வலிமையான நாடு, பயங்கரவாதத்தை அழிக்கும் வலிமை உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார். எந்த ஒரு பிரச்னையிலும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. தில்லியில் ஏற்பட்ட வன்முறை என்பது உள்நாட்டு விவகாரம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக அவர் பேசுகையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்தியாவில் இருந்த தருணங்கள் சிறப்பு வாய்ந்தவை.  தெற்கு ஆசியாவின் அமைதி குறித்தும் மோடியுடன் பேசினேன். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம்புகிறேன்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களை விட அதிகமாக செயலாற்றி உள்ளேன். கரோனா வைரஸ் பரவல் குறித்தும் மோடியுடன் ஆலோசனை நடத்தினேன். கரோனா வைரஸினால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்தியாவுடன் எரிசக்தித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று டிரம்ப் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் வாழும் 99% மக்களும் அமைதியையே விரும்புகிறார்கள். ஈரானைச் சேர்ந்த சுலைமானியை அமெரிக்கப் படைகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றது. உலகில் பல பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவே அமரிக்கர்கள் பணியாற்றி வருகிறார்கள். பயங்கரவாதத்தை ஒழித்து, உலகம் முழுக்க அமைதியை நிலைநாட்டுவதே இலக்கு. பாதுகாப்பு ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா அதிகம் ஆர்வம் காட்டுகிறது என்றும் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT