இந்தியா

தில்லி வன்முறை: நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

25th Feb 2020 09:01 PM

ADVERTISEMENT


வடகிழக்கு தில்லி பகுதியில் நிலவும் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை (புதன்கிழமை) கூடுகிறது.

வடகிழக்கு தில்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மற்றும் ஆதரவான பிரிவினர் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் வெடித்தது. இந்த மோதல் திங்கள்கிழமை வன்முறையாக மாறியது. கல்வீச்சு சம்பவம், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்துவது, கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது என வடகிழக்கு தில்லி பகுதியில் பதற்றம் நிலவியது. இதன் காரணமாக தலைமைக் காவலர் உட்பட 5 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வன்முறை இன்றும் தொடர்ந்து வருகிறது. இன்றைக்கு மேலும் 6 பேர் உயிரிழக்க, உயரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 150 பேர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை கூடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில்,

"தில்லியில் நிலவி வரும் தற்போதைய சூழல் குறித்து தில்லி காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சின் கோஹிலை அழைத்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார். தில்லியின் நிலைமை குறித்தும், வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

தில்லி வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், வன்முறையைக் கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கு தில்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு பரிந்துரைகளையும் வழங்கவுள்ளது. மேலும், தில்லியில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அமைதிப் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துமாறு மாநிலப் பிரிவுக்கு அறிவுறுத்தப்படலாம்" என்றனர்.

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT