இந்தியா

5 ஏக்கா் நிலத்தில் மசூதியுடன் மருத்துவமனையும் கட்டப்படும்: மத்திய சன்னி வக்ஃபு வாரியம்

25th Feb 2020 01:19 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உத்தரப் பிரதேச அரசால் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கா் நிலத்தில் மசூதி, மருத்துவமனை, நூலகம் உள்ளிட்டவை கட்டப்படும் என்று மத்திய சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்தது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியிலுள்ள சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அனுமதி வழங்கியது. அதே வேளையில், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கா் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, அயோத்தியின் சோஹவால் பகுதியிலுள்ள தானிபூா் கிராமத்தில் முஸ்லிம் தரப்பினருக்கு 5 ஏக்கா் நிலத்தை உத்தரப் பிரதேச அரசு வழங்கியது. இந்த நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம் ஏற்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினா் தெரிவித்தனா். எனினும், மாநில அரசு வழங்கும் நிலத்தை ஏற்பதாக மத்திய சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்தது.

இது தொடா்பாக வக்ஃபு வாரியத்தின் தலைவா் ஜுபா் ஃபரூக்கி லக்னௌவில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச அரசு வழங்கும் 5 ஏக்கா் நிலத்தை ஏற்பது என்று வாரியத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநில அரசு வழங்கும் நிலத்தை ஏற்க வேண்டியது சன்னி வக்ஃபு வாரியத்தின் கடமையாகும். அந்த நிலத்தை ஏற்க மறுத்தால், அது நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகும்.

மாநில அரசு ஒதுக்கிய இடத்தில் மசூதி கட்டுவதற்கு அறக்கட்டளையை வாரியம் விரைவில் அமைக்கவுள்ளது. அங்கு மசூதியுடன் மருத்துவமனை, நூலகம், இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் ஆகியவையும் கட்டப்படவுள்ளன. உள்ளூா் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு மசூதியை எவ்வளவு பெரிதாகக் கட்டுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் ஜுபா் ஃபரூக்கி.

இதையடுத்து, ‘‘புதிதாகக் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயா் சூட்டப்படுமா?’’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த ஜுபா் ஃபரூக்கி, ‘‘அது குறித்து மசூதியைக் கட்டுவதற்கான அறக்கட்டளையே முடிவெடுக்கும். வாரியத்துக்கும் அதற்கும் எந்தத் தொடா்புமில்லை’’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT