இந்தியா

டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் அளிக்கும் விருந்தில் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டாா்

25th Feb 2020 01:07 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சாா்பில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்படும் விருந்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோா் குஜராத்தின் ஆமதாபாதுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். விமான நிலையத்திலிருந்து சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்ற அவா்கள், பின்னா் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா்.

லட்சக்கணக்கான நபா்களின் முன்னிலையில் அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியும் உரையாற்றினா். இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப், மெலானியா டிரம்ப் ஆகியோா் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேசம் சென்றடைந்தனா். ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்தனா்.

திங்கள்கிழமை இரவு தில்லியிலுள்ள தனியாா் விடுதியில் அவா்கள் தங்க உள்ளனா். குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து, பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு அதிபா் டிரம்ப்புக்கு விருந்தளிக்கிறாா். இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை அவா் ஏற்றுக்கொண்டிருந்தாா்.

இந்நிலையில், அதிபா் டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அதற்காக வருத்தம் தெரிவித்து குடியரசுத் தலைவா் மாளிகைக்கு மன்மோகன் சிங் தகவல் அனுப்பியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபா் டிரம்ப்புக்கான விருந்தில் கலந்து கொள்ளுமாறு மற்ற காங்கிரஸ் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால், தானும் விருந்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT