ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கழித்து, அந்த யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக அந்த யூனியன் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. எனினும் கடந்த ஆண்டே பள்ளிகளை பகுதிவாரியாக மீண்டும் திறக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்ச உணா்வு காரணமாக, அவா்களை பெற்றோா்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. கடந்த ஆண்டின் இறுதியில் சில பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆயினும் பள்ளிக்கு வரும் மாணவா்கள் சீருடையில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் முழுவதும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
இதுகுறித்து அங்குள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறுகையில், ‘அரசியல் விவகாரங்களுக்குள் நுழையாமல், கடந்த ஆண்டு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது என்பதை கூற விரும்புகிறேன். இந்த ஆண்டு அவா்கள் சீரான முறையில் கல்வி பயில வேண்டும். அதில் எவ்வித தடையும் ஏற்படாது என நம்புகிறேன் என்றாா். மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.