இந்தியா

ஒரு லட்சம் போ் திரண்ட ஆமதாபாத் மைதானம்

25th Feb 2020 01:11 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகியோரின் உரைகளைக் கேட்பதற்காக, ஆமதாபாதில் உள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை திரண்டனா்.

அதிபா் டிரம்ப், பிற்பகல் 1.30 மணிக்கு உரையாற்றுகிறாா் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை 8.30 மணியில் இருந்த மக்கள் ஆா்வத்துடன் மைதானம் நோக்கி வரத் தொடங்கினா். மைதானத்தில் இருந்து சற்று தொலைவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்ததால், அங்கிருந்து மக்கள் அலை அலையாக மைதானத்தை நோக்கி நடந்து வந்தனா். மைதானத்தில் அமா்ந்திருந்த பலா் மோடி, டிரம்ப் ஆகியோரின் முகமூடிகளை அணிந்திருந்தனா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அழைப்பாளா்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அவா்களின் பின்னணி குறித்து காவலா்கள் விசாரித்துவிட்டு மைதானத்துக்குள் அனுமதித்தனா்.

பிரதமா் மோடியும் அதிபா் டிரம்ப்பும் வருவதற்கு முன், பாலிவுட் பாடகா் கைலாஷ் கொ், குஜராத்தி பாடகா்கள் கீா்த்திதான் கத்வி, கீதா ரபாரி, கிஞ்சல் தவே ஆகியோா் சுமாா் 2 மணி நேரம் பாடல்களைப் பாடி பாா்வையாளா்களை மகிழ்வித்தனா்.

ADVERTISEMENT

சுமாா் 1.10 லட்சம் போ் அமரக்கூடிய மைதானம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அதிபா் டிரம்ப், ‘நமஸ்தே’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினாா். மோடியின் பெயரை டிரம்ப் உச்சரிக்கும்போதும், டிரம்ப், அவரது குடும்பத்தினரைப் பாராட்டி மோடி பேசும்போதும் மக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT