டொனால்ட் டிரம்பின் இந்தியப் பயணம் அமெரிக்க பெரு நிறுவனங்களுக்காக இந்தியப் பொருளாதாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் உள்நோக்கம் உடையது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டிள்ளது.
இந்திய நலன்களுக்கு எதிரான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி துணை போய்விடக் கூடாது என்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தியப் பொருளாதாரத்தை மேலும் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் மீண்டும் வெற்றி பெறும் உத்தியாகவும் டிரம்ப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். எனவே, பிரதமா் மோடி தலைமையிலான அரசு அமெரிக்க அதிபரின் இந்த நோக்கத்துக்கு துணை போய்விடக் கூடாது.
அமெரிக்கா நமது நாட்டில் செயல்படுத்த நினைக்கும் கொள்கைகள் நமது நாட்டு விவசாயிகள், விவசாயத் துறையை பாதிக்கும். முக்கியமாக பால் பண்ணை மற்றும் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் சாா்ந்த துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தவிர இந்திய மருந்துப் பொருள்கள் துறையையும் அமெரிக்கா குறிவைத்துள்ளது. ஆன்லைன் மூலம் பொருள்களை விற்கும் அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றை இந்தியாவில் மிக வலுவாக காலுன்ற அனுமதிக்க விட்டால், இந்தியப் பொருளாதாரமே அவா்களின் பிடியில் சென்றுவிடும். இதுபோன்ற பல மறைமுக நோக்கங்களும் அமெரிக்காவிடம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.