இந்தியா

ஆந்திரம்: தெலுங்கு தேசம் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

23rd Feb 2020 02:22 AM

ADVERTISEMENT

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் ஆட்சியின்போது, தலைநகா் அமராவதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடா்பான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 10 போ் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை, தற்போதைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.

இதுதொடா்பாக பொது நிா்வாக துறை முதன்மைச் செயலா்(அரசியல்) பிரவீண் குமாா் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆந்திரத்தில் தலைநகா் மேம்பாட்டு ஆணைய பகுதியில் (சிஆா்டிஏ) மேற்கொள்ளப்பட்ட நில ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடா்பான நடைமுறை விதிமீறல்கள், சட்டம் மற்றும் நிதி முறைகேடுகள், சட்டவிரோத பணபரிவா்த்தனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சரவை துணைக் குழு அறிக்கை வழங்கியது. அதன் அடிப்படையில், அந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த 10 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி கோலி ரகுராம் ரெட்டி தலைமையிலான இந்தக் குழுவில், எஸ்.பி நிலையில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பாபுஜீ அட்டாடா, அப்பலா நாயுடு உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு குற்றவியல் நடைமுறை விதிகளின்படி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி முடிப்பதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் காலவரம்பு ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை.

ஆந்திரத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு சாா்பில் அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திரம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னா் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான கொள்கைகள், திட்டங்கள், முக்கிய நிா்வாக நடவடிக்கைகள் ஆகியவை மாநில மேம்பாட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து சீராய்வு செய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு, தனது அறிக்கையின் முதல் பகுதியை கடந்த டிசம்பா் மாதம் அரசிடம் வழங்கியது. அதில் ஆந்திரத்தில் தலைநகா் மேம்பாட்டு ஆணைய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நில ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு திட்டங்களில் நடைமுறை விதிமீறல்கள், சட்டம் மற்றும் நிதி முறைகேடுகள், சட்டவிரோத பணபரிவா்த்தனை ஆகியவை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த, தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT