இந்தியா

உண்மை மற்றும் சேவை தான் நீதித்துறையின் அடித்தளம்: சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

22nd Feb 2020 02:25 PM

ADVERTISEMENT

 

தலைநகர் தில்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஆகியோர் பங்கேற்றனர்.

2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காலை 10 மணிக்குத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது,

உண்மை மற்றும் சேவை தான் நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதிலும் அவர் ஒரு வழக்குரைஞர் என்பது கூடுதல் சிறப்பு. தான் சந்தித்த முதல் வழக்கு குறித்து தனது சுயசரிதையில் மகாத்மா காந்தி மிக விரிவாக எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்தில், உலகளாவிய விவாதங்களுக்கு உட்பட்ட சில முக்கியமான நீதித்துறை தீர்ப்புகள் வந்துள்ளன. இந்த தீர்ப்புகளுக்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல கவலைகளையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தின, ஆனால் 1.3 பில்லியன் இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,

பயங்கரவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு தனியுரிமைக்கு இனி இடமில்லை. இது உலகளாவிய சவால்களுக்கான நேரம். நாம் தீர்வுகளை எவ்வாறு நாடுகிறோம் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது. சட்டத்தின் படி நடைபெறும் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் வழக்கமான ஒழுங்குமுறையின் படி தீர்வுகளை ஏற்றுக்கொள்வதுதான் இதற்கு ஒரே பதில் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும் என்றார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில்,

இந்தியா பல கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடாகும். இதுவே நாட்டின் நீதி அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கும் சமமாகப் பொருந்தும் உண்மையாகும். அனைத்து வகை நாகரிகங்களில் உள்ள கலாச்சார சட்டங்களையும் இந்திய நீதித்துறை ஒருங்கிணைத்துள்ளது என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT