இந்தியா

சிறப்பு விமானத்துக்கு சீனா அனுமதி வழங்காததே தாமதத்துக்குக் காரணம்: இந்தியத் தூதரகம்

22nd Feb 2020 07:41 PM

ADVERTISEMENT


சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான இந்திய சிறப்பு விமானத்துக்கு சீனா அனுமதி வழங்காததே தாமதத்துக்கான காரணம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட வூஹான் நகரத்தில் இருந்து 647 இந்தியர்கள் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்த 7 பேரையும் இந்த மாத தொடக்கத்தில் இந்தியா சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வந்தது. 

இதன்பிறகு, வூஹான் நகரில் மீதமுள்ள 100-க்கும் மேற்பட்டவர்களை மீட்கவும், கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளவும் சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கவும் இந்திய விமானப் படையின் மிகப் பெரிய விமானமான சி-17 க்ளோப்மாஸ்டர் விமானத்தை அனுப்புவதாக இந்தியா அறிவித்தது. மேலும், இடவசதிக்கு ஏற்ப அண்டை நாட்டு குடிமக்களையும் இந்த விமானம் மூலம் அழைத்து வர இந்திய திட்டமிட்டது. இந்த சிறப்பு விமானத்துக்கு அனுமதி வழங்க சீனா தாமதப்படுத்தி வருவதாக பேச்சுகள் எழுந்தது.

இந்நிலையில், சிறப்பு விமானத்துக்கு சீனத் தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படாததே இந்த காலதாமத்துக்குக் காரணம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அனுப்பியுள்ள செய்தியில்,

ADVERTISEMENT

"தாமதம் காரணமாக உங்களில் சிலர் கவலையில் இருப்பதையும், மற்ற சிலர் ஊகத்தின் அடிப்படையில் தகவல்களைப் பரப்புவதையும் நாங்கள் உணர்கிறோம். தூதரகத்தில் இருந்து அடுத்தகட்ட தகவல்கள் வரும் வரை பொறுமையாகக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்களை அழைத்துச் செல்வதற்கான வாகனம் வருவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்துக்கு முன்பாக உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இதற்கிடையில் போதிய ஓய்வெடுத்து, உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்கெனவே தெரிவித்ததுபோல் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர், உணவு போன்ற ஏதெனும் பிரச்னைகள் இருந்தால் தூதரக அதிகாரிகளுக்கு நேரடியாக தெரியபடுத்துங்கள். சம்மந்தப்பட்ட சீன அலுவலர்களைத் தொடர்பு கொள்வோம்.

சிறப்பு விமானத்துக்கான கோரிக்கை வைத்த பிறகு, சீனத் தரப்பில் இருந்து இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. முடிந்தளவுக்கு மீட்பு விமானத்தை விரைவில் கொண்டு வருவதற்காக சீன அலுவலர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே உள்ளோம். சீனத் தரப்பில் இருந்து இதற்கான அனுமதி கிடைத்தவுடன் உங்களை உடனடியாகத் தொடர்பு கொள்வோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் இதுகுறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) கூறுகையில்,

"இந்தியாவின் மூன்றாவது சிறப்பு விமானம் வூஹான் நகருக்கு வர அனுமதி அளிப்பதில் எந்த கால தாமதமும் செய்யப்படவில்லை. எஞ்சியுள்ள 80 இந்தியர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் சீனாவின் சார்பில் வழங்கப்படும்.

அவர்களை ஏற்றிச் செல்ல வரும் மூன்றாவது விமானத்துக்கான பயண அட்டவணையை இறுதி செய்யும் ஏற்பாடுகளை இருநாடுகளின் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT