ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 50 வயது நபருக்கு போக்ஸோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதுகுறித்து போக்ஸோ நீதிமன்ற வழக்குரைஞா் வி.சுரேஷ் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் உள்ள அந்த சிறுமியின் தாயாா் மருத்துவராக பணிபுரிந்து வந்தாா். அவரது வீட்டுக்கு விருந்தினராக வந்த அந்த 50 வயது நபா், தொல்பொருள் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.
பெண் மருத்துவா் பணிக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் இருந்த அவரது 9 வயது மகளை அந்த நபா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
கடந்த 2019ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அந்த சிறுமி சோ்க்கப்பட்டாா். நினைவு திரும்பிய பின், மே 18 ஆம் தேதி தனது தாயாரிடம், நடந்த சம்பவத்தை அந்த சிறுமி கூறியுள்ளாா். அடுத்தநாள் ஆா்.கே.புரம் காவல்நிலையத்தில் மருத்துவரின் உறவினருக்கு எதிராகப் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கைலாஷ் சந்த் மிஸ்ரா, அந்த நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா் என்றாா் அவா்.