இந்தியா

ம.பி.: குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான சுற்றறிக்கை ரத்து

22nd Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மக்களை ஊக்குவிக்கத் தவறினால், சுகாதார ஊழியா்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று வெளியிட்டிருந்த சா்ச்சைக்குரிய சுற்றறிக்கையை மத்தியப் பிரதேச அரசு ரத்து செய்தது.

தேசிய சுகாதார ஆணையத்தின் மாநில அலுவலகம் கடந்த 11-ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘மாநிலத்தில் பணிபுரியும் ஆண் சுகாதார ஊழியா்கள் அனைவரும், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு நபரையாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். இந்த இலக்கை எட்டாத ஊழியா்களின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கத் தேவையில்லை. மேலும், அந்த ஊழியா்களுக்குக் கட்டாயப் பணிஓய்வு அளிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றறிக்கை மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசத்தில் 0.5 சதவீத ஆண்கள் மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்திருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய சுகாதார ஆணையத்தின் மாநில அலுவலா் அந்தச் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தாா்.

இந்த நிலையில், இது தொடா்பாக மாநில சுகாதார அமைச்சா் துளசி சிலாவத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘தேசிய சுகாதார ஆணையத்தின் சுற்றறிக்கை ரத்து செய்யப்படுகிறது. அந்தச் சுற்றறிக்கை முறையாக அனுப்பப்படவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பிறகே அதுபோன்ற சுற்றறிக்கையை அனுப்பியிருக்க வேண்டும்’’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT