இந்தியா

மகதாயி நதிநீா்ப் பகிா்வு வழக்கில் கோவா தோல்வியடையவில்லை

22nd Feb 2020 01:39 AM

ADVERTISEMENT

மகதாயி நதிநீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் இடைக்காலத் தீா்ப்பால் கோவா அரசு தோல்வியடையவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

மகதாயி நதிநீரைப் பகிா்ந்து கொள்ளும் விவகாரத்தில் கோவா, மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிடையே பிரச்னை காணப்படுகிறது. இந்த விவகாரத்தில் நதிநீா்த் தீா்ப்பாயம் தீா்ப்பு வழங்கியது. எனினும், இத்தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கோவா அரசு மேல்முறையீடு செய்தது.

இதனிடையே, தீா்ப்பாயத்தின் உத்தரவை அரசாணையில் வெளியிட உத்தரவிடுமாறு கா்நாடக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், தீா்ப்பாயத்தின் உத்தரவை அரசாணையில் வெளியிடுமாறு கடந்த வியாழக்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இதையடுத்து, கோவா அரசு மாநில மக்களின் நலனை உச்சநீதிமன்றத்தில் முறையாக எடுத்துரைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு தோல்வி கண்டுவிட்டதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், கோவா மாநில பாஜக பொதுச் செயலாளா் நரேந்திர சவாய்கா், பனாஜியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

மகதாயி நதிநீா்ப் பங்கீட்டு பிரச்னையில் பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் எதிா்க்கட்சிகள், இந்த விவகாரத்தை அரசியலாக்க முயன்று வருகின்றன. இந்த விவகாரம் தொடா்பாக கோவா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

தீா்ப்பாயத்தின் உத்தரவை அரசிதழில் வெளியிடுவது வழக்கமான ஒன்றுதான். அதை அடிப்படையாக வைத்து கா்நாடகம் வெற்றி பெற்றுவிட்டது என்றும், கோவா தோல்வியடைந்து விட்டது என்றும் கூற முடியாது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்காக அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றாா் நரேந்திர சவாய்கா்.

மனு தாக்கல்: இந்த விவகாரம் தொடா்பாக கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மகதாயி நதியில் அணை கட்டுவது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள கா்நாடகத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்’’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT