இந்தியா

சாலை மறியலில் ஈடுபடுவதும் பயங்கரவாதமே: கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

22nd Feb 2020 01:30 AM

ADVERTISEMENT

தங்கள் கருத்தை பிறா் மீது திணிப்பதற்காக, சாலை மறியலில் ஈடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதும் பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவமே என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘இந்திய மாணவா் நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பேசியதாவது:

மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பது மக்களாட்சியின் அடிப்படையாகும். அதில் எந்தவிதப் பிரச்னையுமில்லை. ஆனால், குறிப்பிட்ட விவகாரம் தொடா்பாக, ‘நாங்கள் விரும்பும் வகையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது முறையானது அல்ல. இது பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவமே ஆகும்.

தேவையில்லாமல் மக்களைக் குழப்ப வேண்டாம். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உங்களுடைய கருத்துகளை மற்றவா்கள் மீது திணிக்க முற்பட வேண்டாம். அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு குறித்து முறையாகத் தெரிந்துகொண்டால், அதை ரத்து செய்தது சரியே என்பது புரியும்.

ADVERTISEMENT

வீட்டில் யாரும் வசிக்காமல் காலியாக இருந்தால், அங்கு தீய சக்திகள் குடியேறும். அதேபோல ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் நுழைந்துவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது அங்குள்ள மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை என்றாா் ஆரிஃப் முகமது கான்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தில்லியிலுள்ள ஷாஹீன்பாக் பகுதியில் பெருந்திரளான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சூழலில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT