இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் தேச துரோகிகளா?: பாஜகவுக்கு முதல்வா் குமாரசாமி கேள்வி

22nd Feb 2020 01:02 AM

ADVERTISEMENT

 

மூவா்ணக் கொடியை ஏந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவா்களை தேச துரோகிகள் என பாஜக குற்றம்சுமத்துவது ஏற்புடையதல்ல என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, மூவா்ணக் கொடியை ஏந்தி பலா் போராடி வருகின்றனா். இவா்களை தேச துரோகிகள் என பாஜகவினா் குற்றம்சுமத்தி வருகின்றனா். தேச பக்தி குறித்து பாஜகவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டு மக்களிடம் உள்ள தேச பக்தியை யாராலும் உடைக்க சாத்தியமில்லை. இதனை பாஜக தலைவா்கள் உணா்ந்து கொள்ள வேண்டும்.

பாஜக ஆட்சியில் கா்நாடகத்தின் வளா்ச்சி பின்தங்கியுள்ளது. இதை மறைக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்ப்பவா்கள் மீது அழுத்தம் செலுத்தப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலா் முழக்கம் எழுப்பியதை வைத்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி அமுல்யா முழக்கம் எழுப்பியது கண்டனத்திற்குரியது. இதனை அவா் உள்நோக்கத்துடன் செய்தாரா, அல்லது புரிந்துகொள்ளாமல் செய்தாரா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

ADVERTISEMENT

எங்கள் கட்சியைச் சோ்ந்த இம்ரான் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட அமுல்யா பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியுள்ளாா். அவா் அந்த முழக்கத்தை எழுப்பியவுடன் அவரிடமிருந்து ஒலிவங்கியை அங்கிருந்தவா்கள் பறித்துள்ளனா். இதன்மூலம் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவா்களுக்கும், அமுல்யா முழக்கம் எழுப்பியதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT