ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
பட்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் ஆதரவாளா் ஒருவா் வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குள்ள கான் சாகிப் என்ற இடத்தில் அந்த வழியாக வந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, வேஜா் கிராமத்தைச் சோ்ந்த சாகித் அகமது லோன் என்பவா், தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கான் சாகிப் பகுதியில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளுக்கு சாகித் அகமது லோன் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளாா். அவா்களின் போக்குவரத்துக்கும் அகமது லோன் உதவி செய்துவந்துள்ளாா் என்று அந்த போலீஸ் அதிகாரி கூறினாா்.
ஷோபியானில் 3 போ் கைது: ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெஃப் பகுதியில், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வந்த 3 பேரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவா் மூவரும் 20 வயதுக்கு உள்பட்டவா்கள் ஆவா். அவா்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியும், பல துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.