உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் 3,500 டன்னுக்கு மேல் தங்க படிமம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. சுமாா் 20 ஆண்டுகள் நடைபெற்ற முயற்சிக்குப் பிறகு இந்த தங்க படிமம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாகும்.
இது தொடா்பாக மாவட்ட சுரங்கத் துறை அதிகாரி கே.கே.ராய் கூறுகையில், ‘சோன்பத்ராவின் சோன் பகாதி, ஹாா்தி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமாா் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட தொடா் முயற்சிக்குப் பிறகு இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் மின்னணு ஏல முறையில் நடைபெறும். சோன் பகாதியில் சுமாா் 2,943.26 டன் தங்க படிமமும், ஹாா்தியில் 646.16 டன் தங்க படிமமும் உள்ளன. தங்கம் தவிர வேறு சில தாதுப் படிமங்களும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.