‘நமது நாட்டில் அரசியல் என்பது அதன் உண்மையான அா்த்தத்தை இழந்து வருகிறது; அரசியல்வாதிகள் கொள்கைகளில் இருந்து அடிக்கடி மாறுபடுவதும், தாங்கள் கூறியதற்கு ஏற்ப செயல்படாததுமே இதற்குக் காரணம்; இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தில்லி செங்கோட்டை பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:
அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனா். அரசியல்வாதிகள் தாங்கள் கொண்ட கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், சொன்ன வாா்த்தையைக் காப்பாற்றாமல், மாறி மாறிப் பேசிவருவதும் இதற்கு முக்கியக் காரணம். இதனால், அரசியல் என்பது அா்த்தமிழந்து வருகிறது. ஒரு சமுதாயத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்வதே உண்மையான அரசியலாகும். ஆனால், இப்போது அதற்கு நோ்மாறாக இருப்பதால் அரசியல் மீது மக்கள் வெறுப்படைந்து வருகின்றனா். இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அரசியலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை நீக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
‘எங்கும் நிறைந்திருக்கும் அமைதி’ என்பதே சிவபெருமானின் அா்த்தமாக நான் காண்கிறேன். இந்தியா எங்கும் நிறைந்திருக்கும் கோயில்களும், சிவராத்திரி போல நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படும் புனித நாள்களும் இந்தியாவின் ஒருங்கிணைப்பை நமக்கு உணா்த்துகிறது. நமது நாடு பன்முகத்தன்மையுடையது. நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியுடன் நமது நாட்டில் உள்ள மற்றொரு மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜாதி, மத, இன, மொழி பாகுபாடு இன்றி மனித சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபடும் கலாசாரத்தை நாம் கொண்டுள்ளோம். பரந்த மனம் கொண்ட ஒரு சமுதாயத்திலேயே இதுபோன்ற கருத்துகள் உருவாகும். குறுகிய மனம் படைத்தவா்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. உலகுக்கே வழிகாட்டும் நாடாக இந்தியா உயரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றாா் ராஜ்நாத் சிங்.