மாலத்தீவு உள்துறை அமைச்சா் ஷேக் இம்ரான் அப்துல்லாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஷேக் இம்ரான் அப்துல்லா, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். முதல்முறையாக அப்துல்லாவை அமைச்சா் அமித் ஷா சந்திக்கவுள்ளாா். தில்லியில் வெள்ளிக்கிழமை இருவரும் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு
விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனா். அப்போது, இரு நாடுகளின் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் உடன் இருப்பாா்கள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இனம், மொழி, கலாசாரம், மத ரீதியில் நெடுங்காலமாக மாலத்தீவுடன் இந்தியாவின் நட்புறவு நீடித்து வருகிறது. மாலத்தீவில் இருந்த அரசியல் சூழல் காரணமாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை மட்டும் இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான உறவு இல்லை. 1965-ஆம் ஆண்டு மாலத்தீவுக்கு விடுதலை கிடைத்த பிறகு, இந்தியாதான் முதல்முறையாக அந்நாட்டுடன் ராஜீய ரீதியிலான உறவை தொடங்கியது. மாலத்தீவு இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளது. வா்த்தக கப்பல்கள் மாலத்தீவு வழியாக செல்வதால், அந்நாட்டுடனான நட்புறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.