பல்வேறு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகையான ரூ.19,950 கோடியை மத்திய அரசு வழங்கியது.
இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.19,950 கோடியை மத்திய நிதி அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை விடுவித்தது. இதன்மூலம், இந்த நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.1,20,498 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.62,611 கோடி நிதி மத்திய அரசுக்கு கிடைத்தது. இதில், ரூ.41,146 கோடி மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. 2018-19-இல் ரூ.95,081 கோடி நிதி கிடைத்தது. அதில், ரூ.69,275 கோடி நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இழப்பீடாக அளித்தது. கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.47,271 கோடி நிதி ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு ஈட்டியது’ என்று தெரிவித்தனா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.