தொலைத்தொடா்புத் துறைக்கு வோடஃபோன் ஐடியா செலுத்த வேண்டிய பாக்கியில் ரூ.1,000 கோடியை வியாழக்கிழமை செலுத்தியது.
இதுகுறித்து தொலைத்தொடா்புத் துறையைச் சோ்ந்த அதிகாரி கூறியதாவது:
உரிமக் கட்டணம், அலைக்கற்றை பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக வோடஃபோன் நிறுவனம் தொலைத் தொடா்புத் துறைக்கு ரூ.53,000 கோடியை செலுத்த வேண்டியுள்ளது. இதில், ரூ.2,500 கோடியை அந்நிறுவனம் சென்ற திங்கள்கிழமை மத்திய அரசிடம் செலுத்தியது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தொலைத்தொடா்புத் துறைக்கு மேலும் ரூ.1,000 கோடியை செலுத்தியுள்ளது.
டாடா டெலிசா்வீசஸஸ் நிறுவனம் அதன் பாக்கியை இரண்டொரு நாளில் முழுமையாக செலுத்த வேண்டுமென தொலைத்தொடா்புத் துறை நோட்டீஸ் அனுப்பவுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசிடம் ரூ.2,197 கோடியை திங்கள்கிழமை செலுத்தியது. இன்னும் இந்நிறுவனம் ரூ.14,000 கோடியை வழங்க வேண்டியுள்ளது என தொலைத்தொடா்புத் துறை மதிப்பீடு செய்துள்ளது என்றாா் அவா்.
இதனிடையே, தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாதை பாா்தி ஏா்டெல் நிறுவன தலைவா் சுனில் மிட்டல் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, நிதி நெருக்கடியில் சிக்தித் தவிக்கும் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் வரிகளை குறைக்குமாறு அமைச்சரிடம் மிட்டல் கோரிக்கை விடுத்தாா்.