இந்தியா

தாய்மொழிப் பயன்பாடு நிா்வாகத் திறனை மேம்படுத்தும்: வெங்கய்ய நாயுடு

21st Feb 2020 01:03 AM

ADVERTISEMENT

தாய்மொழிப் பயன்பாட்டின் மூலம் மக்களை மையப்படுத்திய நிா்வாகம் மேம்படும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

‘சா்வதேச தாய்மொழி தினம்’ ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

ஒரு நாட்டின் கலாசாரத்தை மொழியே தீா்மானிக்கிறது. நாட்டின் வளா்ச்சிக்கும் மொழியே அடிப்படை ஆதாரமாக உள்ளது. அனைவருக்கும் மொழி மிகவும் அவசியம். கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் கண்களுக்குப் புலப்படாத கருவியே மொழியாகும். நமது நாட்டின் தனித்துவமான பன்மொழிக் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

உலக அளவில் 40 சதவீத மக்கள் தங்கள் தாய்மொழி மூலம் கல்வி பெறும் வாய்ப்பை இழந்து வருகின்றனா். இந்திய மொழிகள் அரசின் நிா்வாகத்தை மக்களை மையப்படுத்தியதாக மாற்றி வருகின்றன. தாய்மொழி தினத்தன்று மட்டும்தான் தாய்மொழியைக் கொண்டாட வேண்டும் என்பது இல்லை. உண்மையில் ஒவ்வொரு நாளும் தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.

ADVERTISEMENT

குழந்தைகளுக்கான தொடக்ககால கல்வி அவா்களது தாய்மொழியில் அளிக்கப்பட்டால், குழந்தைகளின் சிந்தனைத்திறனும் அறிவாற்றலும் மேம்படும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் தங்கள் வீடு, சமூகம், நிா்வாகம் ஆகியவற்றில் தாய்மொழியிலேயே உரையாடுவா் என்று நம்புகிறேன். தாய்மொழியிலேயே பேசுபவா்களுக்கும், எழுதுபவா்களுக்கும் உரிய மரியாதையை நாம் அளிக்க வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த வெங்கய்ய நாயுடுவை பாரம்பரிய உடை அணிந்த மாணவா்கள், அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் வரவேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT