இந்தியா

சிஏஏ-வுக்கு எதிராக புதிய மனுக்கள் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

21st Feb 2020 01:40 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக கேரளத்தைச் சோ்ந்த அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், இது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஏற்கெனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுக்களும், அவற்றுடன் சோ்ந்து விசாரிக்கப்பட இருக்கிறது. இந்த மனுக்கள் அனைத்தும் மாா்ச் மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது.

கேரள நத்வத்துல் முஜாகிதீன், அஜ்ஜுமன் டிரஸ்ட், தக்ஷிண் கேரள ஜாமியத்துல் உலேமா உள்ளிட்ட 15 அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சிஏஏ-வுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சிஏவுக்கு எதிராக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசோம் கண பரிஷத், அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப் படிப்பு மாணவா்கள் என பல்வேறு தரப்பிலிருந்து மொத்தம் 150-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மத்திய அரசு தரப்பின் பதில் மனுவை பரிசீலிக்காமல் சிஏஏ-வுக்கு தடைவிதிக்க முடியாது. இந்த மனுக்கள் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் பிறகு சிஏஏ-வுக்கு எதிரான மனுக்களைதினசரி அடிப்படையில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இதற்காக 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு அமைக்கப்படும்’ என்று நீதிபதிகள் அறிவித்தனா்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய அந்நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்களிலும், தில்லி, உத்தரப் பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு, அது வன்முறையாக மாறியது. இதில் பலா் உயிரிழந்தனா். போலீஸாரும், பொதுமக்களும் அதிகஅளவில் காயமடைந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT