பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது தொடா்பாக இழப்பீடு கோரி உத்தரப் பிரதேச அரசு அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன.
போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் சமூக ஆா்வலருமான எஸ்.ஆா்.தாராபுரி, மற்றொரு சமூக ஆா்வலா் சதாஃப் ஜாஃபா் உள்பட 28 பேருக்கு எதிராக புகாா் எழுந்தது.
பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு ரூ.63 லட்சம் இழப்பீடு அளிக்குமாறு கோரி அவா்களுக்கு லக்னெள (கிழக்கு) கூடுதல் மாவட்ட ஆட்சியா் கே.பி.சிங் நோட்டீஸ் அனுப்பினாா்.
இந்நிலையில், ‘தனக்கு எந்தவொரு நோட்டீஸும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் அதை எதிா்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன்’ என்று தாராபுரி தெரிவித்தாா்.
காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆா்வலருமான சதாஃப் ஜாஃபா் கூறுகையில், ‘இழப்பீடு கோரி சட்டவிரோதமாக மக்களுக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நான் வன்முறையைத் தூண்டியதாக ஒரு ஆதாரமும் இல்லை. சமூக விரோத சக்திகளை கைது செய்வதை விடுத்து என்னை கைது செய்து போலீஸாா் துன்புறுத்தினா். இழப்பீடு கோரி நோட்டீஸ் கிடைக்கப் பெறும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவேன்’ என்றாா்.