இந்தியா

தில்லியில் 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி

15th Feb 2020 05:37 PM

ADVERTISEMENT


சீனாவில் இருந்தும், கரோனா பாதிப்புள்ள மற்ற நாடுகளில் இருந்தும் தில்லி திரும்பிய 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தில்லி சுகாதாரத் துறையால் வெளியிட்டப்பட்ட தரவுகளின்படி, தில்லி விமான நிலைய அலுவலர்கள் அளித்தத் தகவலின்பேரில், பிப்ரவரி 13 வரை 5,700-க்கும் மேற்பட்ட பயணிகள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறையின் மூத்த அலுவலர் தெரிவிக்கையில், 

"இதில், 4,707 பயணிகளுக்கு கரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், 17 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரவுகளின்படி, இன்னும் கண்டறியப்படாத பயணிகளின் எண்ணிக்கை 817 ஆக உள்ளது. கண்காணிப்பில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை 68 ஆக உள்ளது.

ADVERTISEMENT

யாருக்கேனும் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும். விமான நிலையங்களில் கண்காணிப்புப் பணி நடைமுறை தொடங்கப்படுவதற்கு முன்பும், ஜனவரி 15 மற்றும் ஜனவரி 15-க்குப் பிறகும், தில்லியில் இருந்து சீனா மற்றும் பிற நாடுகளுக்குப் பயணித்து மீண்டும் தில்லி திரும்பிய பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1,523 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 66,000 ஆக அதிகரித்துள்ளது.

தில்லி விமான நிலையம் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 21 விமான நிலையங்களிலும் சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் கண்காணிக்கும் நடைமுறை ஜனவரி 17 தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT