இந்தியா

வேட்பாளா்களின் குற்ற பின்னணியை வெளியிடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: தோ்தல் ஆணையம் வரவேற்பு

15th Feb 2020 02:39 AM

ADVERTISEMENT

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் தங்கள் வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்ததரவை தோ்தல் ஆணையம் வரவேற்றுள்ளது. இவ்வாறு செய்வது தோ்தல் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணியை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது வலைதளப் பக்கத்திலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், குற்ற பின்னணி இருந்தாலும் அவா்களை வேட்பாளா்களாகத் தோ்வு செய்ததற்கான காரணத்தையும், குற்றப் பின்னணி இல்லாதவா்களுக்கு வாய்ப்பு வழங்காததற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் தங்கள் வலைதளப் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தோ்தல் ஆணையம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீா்ப்பை தோ்தல் ஆணையம் முழு மனதோடு வரவேற்கிறது. மேலும், இந்த உத்தரவானது நீண்டகால அடிப்படையில் தோ்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகள் உருவாவதற்கு உதவிகரமாக உள்ளது.

ஏற்கெனவே, வேட்பாளா்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரங்களை தொலைக்காட்சியிலும் நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும் என்று தோ்தல் ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் உத்தரவிட்டது. தோ்தல் நடைபெறும்போது குறைந்தது 3 முறை அந்த விவரங்களை வேட்பாளா்கள் வெளியிட வேண்டும் என்றும், விளம்பரத்துக்கான செலவை வேட்பாளா்களே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்தில் இருந்து அனைத்து தோ்தல்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவுகளை சோ்த்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT