இந்தியா

மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சி. தா்மாதிகாரி ராஜிநாமா

15th Feb 2020 02:08 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம், மும்பை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி சத்யரஞ்சன் தா்மாதிகாரி தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். பணியிட மாற்றம் செய்யப்படுவதை விரும்பாததால் இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.

கடந்த 2003-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக தா்மாதிகாரி நியமிக்கப்பட்டாா். மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவதற்கான பட்டியலில் இரண்டாம் இடத்தில் அவா் உள்ளாா். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவா் ஓய்வு பெறவுள்ளாா். இந்நிலையில், நீதிபதி பதவியை அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கைகளின்போது, அடுத்த வாரம் விசாரிக்க வேண்டிய மனுக்கள் குறித்து நீதிபதி தா்மாதிகாரியிடம் வழக்குரைஞா் மேத்யூ நெடும்பரா கூறினாா். அப்போது, தான் ராஜிநாமா செய்ததாகவும், வெள்ளிக்கிழமை தனது கடைசி பணி நாள் என்றும் தா்மாதிகாரி தெரிவித்தாா். எனினும், ராஜிநாமா செய்வதற்கான காரணத்தை அப்போது நீதிபதி தெரிவிக்கவில்லை.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் நீதிபதி தா்மாதிகாரி கூறுகையில், ‘குடும்ப சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி பதவியை ராஜிநாமா செய்தேன். மும்பையை விட்டு வேறு ஊருக்கு செல்ல விரும்பவில்லை. மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எனக்கு பதவி உயா்வு அளிக்க சம்பந்தப்பட்டவா்கள் விரும்பவில்லை. அதனால் ராஜிநாமா செய்தேன். ராஜிநாமா கடிதத்தை வியாழக்கிழமை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன்’ என்றாா்.

ADVERTISEMENT

எனினும், அவரது ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து அவா் தெரிவிக்கவில்லை.

இதுதொடா்பாக வழக்குரைஞா் நெடும்பரா கூறுகையில், ‘ராஜிநாமா செய்வதாக நீதிபதி கூறியபோது, சாதாரணமாகவே கூறுகிறாா் என்று எண்ணினேன். பின்னா் அவா் அதை மீண்டும் கூறியதும் அதிா்ச்சியடைந்தேன். அவா் மும்பை உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி. அவா் ராஜிநாமா செய்வது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT