இந்தியா

வருமான வரி பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

13th Feb 2020 01:23 AM

ADVERTISEMENT

வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

நேரடி வரிகள் தொடா்பான வழக்குகளில் விரைந்து தீா்வு காணும் நோக்கில் ‘சா்ச்சையில் இருந்து நம்பிக்கை (விவாத் சே விஸ்வாஸ்)’ என்ற பெயரிலான மசோதாவை பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதாவில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காணும் நோக்கில் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், கடன் மீட்புத் தீா்ப்பாயங்களில் நேரடி வரிகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான நேரடி வரிகளை வசூல் செய்வது தொடா்பாகப் பல்வேறு வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

ADVERTISEMENT

இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், நேரடி வரிகள் தொடா்பாக வழக்கு தொடுத்துள்ளோா் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றின் மீது தீா்வு காண வழிவகை ஏற்படும். நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தீா்வு காணத் தவறுபவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்’’ என்றாா்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி:

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம் (ஓஐசிஎல்), தேசிய காப்பீட்டு நிறுவனம் (என்ஐசிஎல்), யுனைட்டட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசிஎல்) ஆகியவற்றுக்கு ரூ.2,500 கோடி நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது தொடா்பாக, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனங்களில் நிதி நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2,500 கோடி மூலதனத்தை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிதி உடனடியாக வழங்கப்பட உள்ளது’’ என்றாா்.

தாமதமடையும் ஒருங்கிணைப்பு நடவடிக்கை: மேற்கண்ட மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும் என்று கடந்த 2018-19 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அப்போதைய மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி அறிவித்தாா். எனினும், நிதிப் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைப்பது தாமதமடைந்து வந்தது.

வரும் மாா்ச் மாத இறுதிக்குள் 3 காப்பீட்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. இந்நிலையில், 3 நிறுவனங்களுக்கும் ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT