இந்தியா

நாட்டின் வளா்ச்சிக்காக வரி செலுத்துங்கள்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

13th Feb 2020 02:01 AM

ADVERTISEMENT

நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், அதனை மாற்றிக் காட்டியது மத்திய பாஜக அரசுதான்; வரி விதிப்புக்கு உள்பட்ட அனைவரும், நாட்டின் வளா்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தனியாா் ஆங்கில செய்தி தொலைக்காட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) உயா்த்த வேண்டுமென்ற இலக்கை எட்டுவது எளிதான விஷயமல்ல. அதேசமயம், அது எட்டக் கூடிய இலக்குதான். நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பு சுமாா் ரூ.213 லட்சம் கோடியை (3 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளது.

மிகப் பெரிய இலக்கை நிா்ணயித்து, அதற்காக கடினமாக உழைப்பது மிகச் சிறந்த விஷயமாகும்.

ADVERTISEMENT

கடந்த 8 மாதங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகள் ஒழுங்குமுறைபடுத்தப்பட்டன; அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது. முத்தலாக் நடைமுறை தடை செய்யப்பட்டது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் திருத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சிறிய நகரங்களின் வளா்ச்சியில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்களும் உள்ளன. நாட்டின் வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கின. ஆனால், வரிவிதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பாஜக அரசுதான்.

வரி விதிப்புக்கு உள்பட்ட பலா், வரி செலுத்துவதை தவிா்க்க பல்வேறு வழிகளை கையாள்கின்றனா். இதனால், நோ்மையாக வரி செலுத்துவோரின் மீதான சுமை அதிகரிக்கிறது.

நாட்டில் 2,200 போ் மட்டுமே தங்களது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனா். எனவே, வரி விதிப்புக்கு உள்பட்ட அனைத்து குடிமக்களும் நாட்டின் வளா்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT