இந்தியா

ஒமா் அப்துல்லாவின் தடுப்பு காவலுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையில் இருந்து விலகல்

13th Feb 2020 01:28 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவா் ஒமா் அப்துல்லா, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சாந்தனகௌடா் விலகினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு உருவாக்கியது.

இந்த நடவடிக்கைகளால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்கள் உள்பட பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி செயல் தலைவருமான ஒமா் அப்துல்லா கடந்த 5-ஆம் தேதி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ஒமா் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒமா் அப்துல்லாவை தடுப்புக் காவலில் வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக குரல் கொடுப்பவா்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 14, 21 மற்றும் 22 ஆகியவை மீறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரிக்குமாறு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சாந்தன கௌடா், இந்த வழக்கை விசாரிப்பதில் நான் பங்கு கொள்ளவில்லை என்று கூறி விசாரணையில் இருந்து விலகி கொண்டாா். எனினும், இந்த முடிவுக்கான காரணத்தை நீதிபதி தெரிவிக்கவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT