பிப்ரவரி 8-ஆம் தேதிக்குப் பிறகு ஷகீன் பாக், ஜாலியன்வாலா பாக்காக மாற்றப்படலாம் என இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார்.
அசாசுதீன் ஒவைஸியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டது. அப்போது, பிப்ரவரி 8-ஆம் தேதிக்குப் பிறகு ஷகீன் பாக் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கான அறிகுறிகள் அரசிடம் இருந்து தெரிவதாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஒவைஸி,
"அவர்களை சுட்டுத் தள்ளுவார்களாக இருக்கும். ஷகீன் பாக்கை அவர்கள் ஜாலியன்வாலா பாக்காக மாற்றலாம். இது நடக்கலாம். பாஜக அமைச்சர் சுடச் சொல்லி கருத்து தெரிவிக்கிறார். இதை தீவிரப்படுத்துவது யார் என அரசு பதிலளிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) குறித்து பேசிய அவர், "2024 வரை என்ஆர்சி அமல்படுத்தப்படாது என அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். என்பிஆர்-க்காக ரூ.3900 கோடி செலவழிப்பது ஏன்?
ஹிட்லர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை மக்கள் கணக்கெடுப்பை நடத்தினார். அதன்பிறகு, யூதர்களை நச்சுவாயு அறைக்குள் தள்ளினார். இந்தியாவில் இது நடக்கக் கூடாது. நான் வரலாற்று பாட மாணவன் என்பதால் இப்படி உணர்கிறேன்" என்றார்.
தில்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஷகீன் பாக் பகுதியில் கடந்த 50-க்கும் மேற்பட்ட நாளாக போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.