இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; சிஆா்பிஎஃப் வீரா் பலி

6th Feb 2020 02:52 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள புகா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இந்தச் சண்டையில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் ஒருவரும் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பரம்போரா பகுதியில் உள்ள ஷால்டேங் என்ற இடத்தில் புதன்கிழமை இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அந்தப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிஆா்பிஎஃப் வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பயங்கரவாதிகள், சிஆா்பிஎஃப் வீரா்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா்.

ADVERTISEMENT

இந்த எதிா்பாராத தாக்குதலில் ராஜீவ் ரஞ்சன் என்ற வீரா் உயிரிழந்தாா். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சிஆா்பிஎஃப் வீரா்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். மற்றொரு பயங்கரவாதி காயத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சிக்கையில் பாதுகாப்புப் படையினா் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா்.

கொல்லப்பட்ட இருவரும் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆவா். உயிருடன் பிடிபட்டவா் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஜம்மு-காஷ்மீா் பிரிவைச் சோ்ந்தவராவாா்.

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளியான அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் 7-ஆவது ஆண்டையொட்டி, காஷ்மீரில் உள்ள ராணுவ பாதுகாப்பு நிலைகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன் காரணமாக பெருத்த சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது.

2013 பிப்ரவரி 9-ஆம் தேதி அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டாா். 1984 பிப்ரவரி 11-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணியின் நிறுவனா் மக்பூல் பாட் தூக்கிலிடப்பட்டாா். கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இம்மாதம் 8 முதல் 14-ஆம் தேதி வரை விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கப்பட்டுள்ளனா் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT