புது தில்லி: மேற்கு வங்கத்தில் 'தீண்டாமை அரசியல்' நிலவுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக எம்.பி திலீப் கோஷ் சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மேற்கு வங்கத்தின் மேதினிபூர் தொகுதி எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான திலீப் கோஷ் பேசியதாவது:
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நான் அங்குள்ள உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவரிடம் பேசினேன். அதையடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு கட்சித் தலைமையிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மாநில பாஜக தலைவர் என்னிடம் தெரிவித்தார்.
மாநில அரசால் தீணடாமை அரசியல் எல்லா இடத்திலும் பரப்பப்படுகிறது.
எம்.பிகளாக இருந்த போதிலும் நான் உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்திக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் முதன்மை நீதிபதிகள் நேரம் ஒதுக்குவதில்லை. மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் சாதனைகளை கொண்டாட நாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எங்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் என்பதே இல்லை.
இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கும், காங்கிரஸ் , திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளை ஒரு கட்டத்தில் மக்கள் வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.