இந்தியா

ஷகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர்: காவல் துறை

4th Feb 2020 10:38 PM

ADVERTISEMENT


தில்லி ஷகீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர் என தில்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம் ஆத்மி இதை இழிவான அரசியல் என குறிப்பிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து போராட்டம் நடந்து வரும் ஷகீன் பாக் பகுதியில் கடந்த சனிக்கிழமை கபில் குஜ்ஜாா் என்ற இளைஞர் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதையடுத்து, காவல் துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் விஜேதா சிங் ராவத் முன் ஆஜர்படுத்தினர். அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் ஆம் ஆத்மி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் காவல் துறையினர் காண்பித்துள்ளனர். இந்த விசாரணை தொடர்பான காவல் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததன்படி, குஜ்ஜாருக்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்பு உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து காவலர் ஒருவர் தெரிவிக்கையில், "விசாரணையின்போது கபில் குஜ்ஜாரின் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் மற்றும் அதிஷி மர்லேனாவுடன் இருக்கும் புகைப்படங்கள் தெரியவந்தது. 2019 தொடக்கத்தில் அவரும் அவரது தந்தையும் ஆம் ஆத்மியில் இணைந்தனர். அவர் புகைப்படங்களை அழித்துள்ளார். ஆனால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை திரும்ப எடுத்துள்ளோம். " என்றார்.

சஞ்சய் சிங் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். அதேசமயம், அதிஷி தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து, சஞ்சய் சிங் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், பாஜக தனது இழிவான அரசியலை செய்ய முயற்சிக்கும். பொறுத்திருந்து பாருங்கள், எத்தனை புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியே வரும் என்று. இது மக்களின் கவனத்தை திசை திருப்பவே" என்றார்.

தில்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை வெடித்துள்ளது தில்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT