இந்தியா

தில்லி தேர்தல் முடிவுகள் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

4th Feb 2020 06:48 PM

ADVERTISEMENT


தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த நாட்டு வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

"இந்த தசாப்தத்தின் முதல் தேர்தல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல். இந்த தசாப்தம் இந்தியாவுக்கு சொந்தமாகவுள்ளது. இன்றைக்கு எடுக்கப்படவுள்ள முடிவைச் சார்ந்துதான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. தடைகளையும், வெறுப்புகளையும் பரப்பும் அரசியலில் இருந்து இந்த நகரம் விடுபட வேண்டும். குறைகளைக் கூறும் அரசைவிட வழிகளைக் காட்டும் அரசுதான் தில்லிக்குத் தேவை.

தேர்தலுக்கு 4 நாள்களே உள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டிருப்பது பலபேரது தூக்கத்தைக் கலைத்துள்ளது. நேற்று கிழக்கு தில்லியிலும், இன்று துவாரகாவிலும் உள்ள மக்களின் மனநிலை தேர்தல் முடிவுகளைத் தெளிவுபடுத்துகிறது. 

ADVERTISEMENT

தில்லியில் வாழும் மக்களின் வாழ்க்கை குறித்து மாநில அரசுக்கு கவலையில்லை. பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்க வீடற்ற மக்களுக்கு அனுமதி இல்லை. இதில் வீடற்ற மக்கள் செய்த பிழை என்ன? பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியாமல் இருப்பதில் விவசாயிகளின் தவறு என்ன இருக்கிறது? 4-ஆம் கட்ட தில்லி மெட்ரோ விரிவாக்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் கிடைக்கவில்லை. தில்லியின் தினசரி பயணிகள் ஏன் இதற்காகப் பாதிக்கப்பட வேண்டும்?" என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT