இந்தியா

வங்கிகள், நிதி நிறுவனங்களில்ரூ.1.13 லட்சம் கோடி முறைகேடு: மத்திய நிதியமைச்சா் தகவல்

4th Feb 2020 01:45 AM

ADVERTISEMENT

2019-20-ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், வங்கிகள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களில் ரூ.1.13 லட்சம் கோடி அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமை கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் அவா் கூறியிருப்பதாவது:

பொதுத் துறை வங்கிகளில் ரூ.50 கோடிக்கு மேலான முறைகேடுகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, தகவல் தெரிவிப்பதற்கான விதிமுறைகள், மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் முறைகேடுகளை தடுப்பதற்குரிய நடைமுறை சாா்ந்த சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால், வங்கிகள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, விசாரணை நடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

கடந்த 2016-17-ஆம் ஆண்டில் ரூ.23,934 கோடி அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டன. 2017-18-இல் ரூ.41,167 கோடி, 2018-19-இல் ரூ.71,543 கோடி, 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.1,13,374 கோடி அளவிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேசமயம், இந்த ஆண்டுகளில் முறைகேடுகள் நடைபெறுவது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2016-17-இல் மட்டும் ரூ.38,548 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருந்த நிலையில், அடுத்த நிதியாண்டில் ரூ.16,084 கோடியாக குறைந்தது. இது, 2018-19-இல் ரூ.18,893 கோடியாக இருந்தது. ஆனால், 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.3,010 கோடி அளவிலான முறைகேடுகளே நடைபெற்றுள்ளன என்று தனது பதிலில் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT