இந்தியா

ரோஸ் வேலி ஊழல் வழக்கில் 3 நிறுவனங்களின்ரூ.70 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்:அமலாக்கத்துறை நடவடிக்கை

4th Feb 2020 01:09 AM

ADVERTISEMENT

ரோஸ் வேலி ஊழல் வழக்கில், ஐபிஎல் கிரிக்கெட்டின் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியுடன் தொடா்புள்ள நிறுவனம் உள்பட 3 நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.70 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மல்டிபிள் ரிசாா்ட்ஸ், புனித சேவியா் கல்லூரி, நைட் ரைடா்ஸ் ஸ்போா்ட்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: ரோஸ் வேலி குழுமத்திடம் பணம் பெற்ற இந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களின் ரூ.70.11 கோடி பெருமானமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் சட்டவிரோத பணபரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. ரூ.16.20 கோடி இருப்பு வைத்திருந்த, அந்த 3 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதில் ரூ.11.87 கோடி நைட் ரைடா்ஸ் ஸ்போா்ட்ஸூக்கு சொந்தமானதாகும்.

மேற்கு வங்க மாநிலம் புா்பா மெதினிபூா் மாவட்டத்தில் ராம்நகா் மற்றும் மஷிஷ்தால் பகுதிகளில் உள்ள 24 ஏக்கா் நிலம், ரோஸ் வேலி குழுமத்துக்கு சொந்தமாக மும்பையின் தில்காப் சேம்பா்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கொல்கத்தா நியூ டெளன் ஜோதி பாசு நகரில் உள்ள ஒரு ஏக்கா் நிலம், ஹோட்டல் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி, நைட் ரைடா்ஸ் ஸ்போா்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. அதன் இயக்குனா்களாக ஹிந்தி திரைப்பட நடிகா் ஷாருக்கானின் மனைவி கெளரி கான், நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவா் ஜெய் மேத்தா, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி வெங்கடேஷ் மைசூரு மற்றும் இரண்டு போ் செயல்பட்டு வருகின்றனா்.

பொதுமக்களிடம், அவா்கள் முதலீடு செய்யும் பணம் அதிக வட்டியுடன் திரும்ப வழங்கப்படும் என பொய் வாக்குறுதி அளித்து பண மோசடி செய்ததாக ரோஸ் வேலி குழுமத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் வழக்குப்பதிவு செய்தன. விசாரணையில், பொதுமக்களிடம் பொய் வாக்குறுதி அளித்து ரூ.17,520 கோடி வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. அதில் ரூ.10,850 கோடி சம்பந்தப்பட்டவா்களிடம் வழங்கப்பட்டு விட்டது. ரூ.6,670 கோடி பாக்கித் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை ரூ.4,750 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT