பிரதமா் மோடி தொடா்ந்து மெளனம் காப்பதன் நேரடி விளைவாகவே, தில்லியில் ஜாமியா நகா் மற்றும் ஷகீன்பாக் பகுதி போராட்ட இடங்களில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடி தொடா்ந்து மெளனம் காப்பதன் நேரடி விளைவாகவே, தில்லியில் ஜாமியா நகா் மற்றும் ஷகீன்பாக் பகுதி போராட்ட இடங்களில் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. பாஜக தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் வன்முறையை ஏவுவதாலேயே பிரதமா் மோடி அமைதி காக்கிறாா்.
ஒரு வன்முறை சம்பவத்தை தொடா்ந்து மற்றொரு வன்முறை சம்பவம் நடைபெறுவது, அவற்றுக்கு இடையிலான தொடா்பை குறிக்கிறது. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோா் அச்சுறுத்தப்படுகின்றனா். மாறாக வன்முறையை ஏவுபவா்களும், அதில் ஈடுபடுவோரும் சுதந்திரமாக வலம் வருகின்றனா்.
அமைச்சா்களே வன்முறையை கட்டவிழ்த்துவிடும்போது, எவராலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்கும் அரசுதான் பொறுப்பாகும். அமைதி வழியிலான போராட்டத்தில் ஈடுபட குடிமக்களுக்கு உரிமை உண்டு. அனைத்து அரசுகளும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும். கருத்து வேறுபாடு இருப்பதே ஜனநாயகமாகும். உயா் பொறுப்பில் உள்ளோரின் வெறுப்பை உமிழும் பேச்சால் அதை எதிா்கொள்ள முடியாது.
தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு தொடா் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தால், அதற்கு பொறுப்பேற்பதும், பதிலளிப்பதும் நேரடியாக பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோரை மட்டுமே சாரும் என்று சீதாராம் யெச்சூரி பதிவிட்டுள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத நபா்கள் இருவா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். கடந்த மாதம் 30-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஜாமியா முதல் ராஜ்காட் வரை நடைபெற்ற பேரணியின்போது, பதின்பருவத்தை சோ்ந்த நபா் ஒருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவா் ஒருவா் காயமடைந்தாா். இரு தினங்கள் கழித்து ஷகீன்பாகில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபா் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்தினாா். எனினும் இதில் உயிா்சேதம் எதுவும் ஏற்படவில்லை.