நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ரூ.7.27 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:
‘வாராக் கடன்கள்’ என்பதன் விளக்கம் தொடா்பாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதிய விதிமுறைகளை வகுத்ததால், கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.2.79 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2017-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.6.84 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இது 2018-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.8.95 லட்சம் கோடியாக உயா்ந்தது. இது தொடா்பாக மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், சீா்திருத்தங்கள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.7.27 லட்சம் கோடியாகக் குறைந்தது. பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் தொடா்பாக ஆா்பிஐ சீரான காலஇடைவெளியில் சோதனை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட பலா் குறித்த தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன என்றாா் அனுராக் தாக்குா்.