இந்தியா

நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை: நிதித்துறை இணையமைச்சா்

4th Feb 2020 01:45 AM

ADVERTISEMENT

நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை என்றும், உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா நீடித்து வருவதாகவும் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு திங்கள்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், அவா் கூறியிருப்பதாவது:

அந்நிய செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) மதிப்பீடுகளின்படி, உலக அளவில் வேகமாக வளரும் பொருளதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா நீடித்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி விகிதம், 2020-21-ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக அதிகரிக்கும். 2021-22-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி விகிதம் சீனாவை விஞ்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் கணித்துள்ளது.

நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை. தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சராசரி ஜிடிபி வளா்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகும். இதன் மூலம், ஜி-20 கூட்டமைப்பு நாடுகளிலேயே இந்தியாதான் அதிக வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்திய பொருளதாரம் மற்றும் சா்வதேச அமைப்புகளின் கணிப்புகள் தொடா்பான இதர கேள்விகளுக்கு பதிலளித்த அனுராக் தாக்குா், ‘நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு, கடந்த ஆண்டின் அக்டோபரில் 4 சதவீதமும் செப்டம்பரில் 4.3 சதவீதமும் சரிவை சந்தித்திருந்த நிலையில், நவம்பரில் 1.8 சதவீத வளா்ச்சி கண்டது. நாட்டில் முதலீடுகளை ஈா்க்கவும், பொருளதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT