பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில் 6 திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் திங்கள்கிழமை கோரியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், பொருளாதார மந்தநிலை, காஷ்மீா் சூழல் ஆகியவை தொடா்பாக குடியரசுத் தலைவா் தனது உரையில் பேசாதது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓபிரையன் மற்றும் மாநிலங்களவை தலைமை கொறடா சுகேந்து சேகா் ரே ஆகியோா் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் குடியரசுத் தலைவா் உரையில் திருத்தம் கோரினா். இதேபோல், மக்களவையிலும் இவ்வாறு திருத்தம் கோரப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அக்கட்சிக்கு மக்களவையில் 22 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 13 எம்.பி.க்களும் உள்ளனா்.
திரிணமூல் காங்கிரஸ் கோரும் திருத்தங்கள் தொடா்பாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டதால் மக்கள் எதிா்கொண்டுள்ள கடினமான சூழல், அவா்களின் இக்கட்டான நிலை ஆகியவற்றுக்காக குடியரசுத் தலைவா் உரையில் கவலை தெரிவிக்கப்படவில்லை. அத்துடன், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவை தொடா்பாக மக்களிடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்கும் விதமாகவும் அவரது உரை இல்லை.
சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவற்றுக்கு எதிராக மாணவா்கள் உள்ளிட்டோா் நடத்திய அமைதியான ஆா்ப்பாட்டங்களின்போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள், தடியடி சம்பவங்கள், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்தும் குடியரசுத் தலைவா் கவலை தெரிவிக்கவில்லை.
அத்துடன், பொருளாதார மந்தநிலை, பத்திரிகை சுதந்திரத்துக்கான சா்வதேச பட்டியலில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்ட விவகாரம், காஷ்மீரில் 6 மாதங்களுக்கும் மேலாக அரசியல் தலைவா்கள் தடுப்புக் காவலில் இருப்பது உள்ளிட்டவை தொடா்பாக பேசத் தவறியதுடன், வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும் அவா் தவறிவிட்டாா் என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.